என்னைப் பற்றி

Page

எனது பெயர் MUHELEN என்று மலேசிய பிறப்பு ஆவணத்தில் என்கணியியல் நம்பிக்கையில் பெற்றோர் (அம்மா : மல்லிகா, அப்பா : முருகன்) பதிந்துள்ளனர். அப்பா பெயரின் மு எழுத்தை தொடக்கத்தில் வைக்க எண்ணி பல பெயர்களைப் பட்டியலிட்டு தமிழில் முகிலன் என இறுதியில் பெயரிட்டுள்ளனர். இதுவே எனது முதல் அடையாளமாகிறது. கூடவே இனம் இந்தியனாகவும் மதம் இந்துவாகவும் குறிப்பிட்டுள்ளது எனது அடுத்த அடையாளங்களாகின்றன.

இராசி, இலக்கினம் எல்லாம் பார்த்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் பிறந்த நாள் (ஆங்கில ஆண்டின்) அடிப்படையில் ஏதோ கூட்டி 6 வரவேண்டி வைத்த பெயர். ஏன் 6 வரவேண்டும் என்று இன்றுவரை எனக்குத் தெளிவில்லை. இந்தப் பெயரை யார் முதலில் முன்மொழிந்தார் என்பதும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் முதலில் இப்பெயரை கூப்பிடுவதில் தடுமாற்றம் இருந்ததாக ஆங்கிலவழிக் கல்வி கற்றிருந்த அம்மா கூறியிருக்கின்றார். பிறகு ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு என்னை அழைக்கத் தொடங்கியிருக்கின்றார். அப்பாவும் ஆங்கிலவழிக் கல்விதான் என்றாலும், தமிழைத் தானாகவே கற்றுக் கொண்டுள்ளதால் (ம.கோ.இராமச்சந்திரனுக்கு நன்றி – இதைப் பற்றி வேறு ஒரு பதிவில் பதிகின்றேன்) அவருக்கு அச்சிக்கல் வந்திருக்க வாய்ப்பில்லை.

வீட்டில் பேசுவது தமிழ் மொழிதான். எனது மழலை சொற்களை அப்பா ஒலிவடிவில் சேமித்துவைத்துள்ளார். தமிழில் தான் பேசியிருக்கின்றேன். எனக்கு நினைவில் இருக்கும் காலம் தொடங்கித் தமிழில்தான் பேசிவருகின்றேன். அம்மாவுக்குத் தமிழ் எழுத படிக்கத் தெரியாமல் போனாலும், தமிழ் மொழியில் பேசுவதில் சிக்கலில்லாமல் போனதால், தமிழே தாய்மொழியாகியது. இருந்தாலும் தமிழ் எனும் சொல்லை நான் முதலில் கேட்டது தமிழ்ப்பள்ளியில் சேரும்போதுதான்.

மொழியைத் தவிர்த்து எனது இளமைக்கால நினைவில் இருக்கும் வேறு அடையாளம் இறைவனை வணங்குதல் (சாமி கும்பிடுதல்). எங்கள் வீட்டு வரவேற்பறையின் ஓரத்தில் காணப்படும் சிறிய மேடையில் ஒரு சாமிப்படம் இருக்கும். அதில் திருநீறு இருக்கும். விளக்கு இருந்த நினைவில்லை. ஒவ்வொரு மாலையும் குளித்த பிறகு அப்படத்தின் முன் நின்று கைக்கூப்பி வணங்கி திருநீற்றை நெற்றியில் சிறியளவு வைப்பதுதான் அன்றாடச் செயல். தூங்கும்போதும் இதனைச் செய்வதுண்டு. பள்ளிக்குச் சென்ற பின்பு, காலையிலும் இது தொடர்ந்தது. அச்சாமிப்படத்தில் சாமி குடும்பமாக அமர்திருப்பதும் கூடவே மாடு, சேவல், மயில், எலி, பால், பழம் இருப்பதைப் பார்த்தவுடன் கண்னை மூடிக்கோண்டு “கடவுளே நான் நல்லா இருக்க வேண்டும், எந்த நோயும் வரக்கூடாது, நல்லா படிக்க உதவ வேண்டும்” என்று சொல்லிக்கொடுத்ததைத் தவறாமல் ஒப்புவிப்பது ஒவ்வொரு நாள் செயலாக ஊறிப்போனது. அந்தப் படம் தான் பின்னாளில் ஏன்? எதற்கு? எனும் கேள்விகள் என் மனதில் எழுவதற்கு அடிப்படையாகவும் அறியாமையறிந்து மெய்ப்பொருள் தேடலுக்கும் வழிவகுத்தது.

08/02/2018

(தொடரும்…)